Showing posts with label கோவில்கள். Show all posts
Showing posts with label கோவில்கள். Show all posts

சிதம்பரம் நடராஜர் கோவில்

Author: முகேஷ் .M // Category:

சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் தீட்சிதர்களால் நிருவகிக்கப்பட்டுவந்து தற்போது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.


இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம்.


சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே.


மேலும் சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்றழைக்கப்படும்.


1) சிதம்பரம் - கனகசபை
2) திருவாலங்காடு - இரத்தினசபை
3) மதுரை - வெள்ளிசபை
4) திருநெல்வேலி - தாமிரசபை
5) திருக்குற்றாலம் - சித்திரசபை.


இதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.


சிற்சபை - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூறை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.


கனகசபை - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூறை வேய்ந்ததாக கூறுவர்.


ராஜசபை - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.


தேவசபை - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் கூறை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.


நிருத்தசபை - இந்த சபை கொடிமரத்துக்கு தென்புரத்தில் உள்ளது. இங்கு சிவன் காளியுடன் நடனமாடினார்.


இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.


கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன.


மேலும் மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம்.


மற்ற கோவில்களைப் போலவே அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நிதிகளும் உள்ளன. பதஞ்சலி முனிவரும், வியாக்ய பாரதரும் வழிபட்ட சிவலிங்கம் - திருஆதிமூலநாதரும், உமையம்மையும் உள்ளனர். இங்கு இருக்கும் விநாயகர் சங்கு ஊதுவதை போல காட்சியளிக்கிறார். கோவிலின் உள்ளே சிவகங்கை எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் பரமாநந்த கூபம் எனும் பெயரில் கேணியும் உள்ளன. இந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால் 500 ஆம் ஆண்டு இங்கு வந்த ஹிரண்ய சக்கரவர்த்திக்கு தொழுநோய் குணமானதாகவும் வரலாறு உண்டு. 500ஆம் ஆண்டுக்குப் பின்னரே பல மன்னர்களால் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வரலாறுகள் கூறுகின்றன.


எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.


திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.


இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன.


தினமும் நடராஜருக்கு ஆறு பூஜைகள் நடப்பதை குறிக்கும் வகையில் வருடத்தில் ஆறு விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.


1)முதல் பூஜையை குறிக்கும் வகையில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும்


2)இரண்டாம் பூஜையை குறிக்கும் வகையில் மாசி மாதம் சதுர்த்தசியிலும்,


3)மூன்றாம் பூஜையை குறிக்கும் வகையில் சித்திரை மாதம் திருவோணத்திலும்


4)நான்காம் பூஜையை குறிக்கும் வகையில் ஆனி மாதம் உத்திரத்தில் ஆனி திருமஞ்சனமும்,


5)ஐந்தாம் பூஜையை குறிக்கும் வகையில் ஆவணி மாதம் சதுர்த்தசியிலும்.


6)ஆறாம் பூஜையை குறிக்கும் வ்கையில் புரட்டாசி மாதம் சதுர்த்தசியிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.



கோவில் திறந்திருக்கும் நேரம் : காலை 6 மணி முதல் பகல் 12 மணி மற்றும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரையும்.


எப்படி செல்வது?
1)சிதம்பரத்திற்கு கடலூர், சென்னை, மயிலாடுதுறை போன்ற பல இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.


2)சிதம்பரத்தில் ரயில் நிலையமும் உண்டு. சிதம்பரத்திற்கு செல்லும் சில ரயில்கள் 6701, 6702, 2794, 6175, 6854, 6853.


3)சிதம்பரத்திற்கு அருகில் உள்ள விமான நிலையம் - திருச்சி 195 கி.மீ தொலைவில்.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில்

Author: முகேஷ் .M // Category:

ஏகாம்பரேஸ்வரர் கோவில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூத ஸ்தலங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் பஞ்ச பூதங்களில் ஒன்றான நிலத்தைக் குறிக்கிறது. இந்தக் கோவிலின் முக்கிய கடவுளான சிவன் ஏகாம்பரேஸ்வரர் என்ற பெயரிலும், அம்பிகை காமாட்சி அம்மன் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்கள். மொத்தம் 40 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவில், 600ஆம் ஆண்டே கட்டப்பட்டிருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.


இங்கு உள்ள சிவபெருமானை பிருத்வி லிங்கம் என்று அழைப்பர். மேலும் இந்த சிவபெருமான் மண்ணால் ஆனவர். இதனை சுயம்பு என்றும் கூறுவது உண்டு. அதனால் இந்த சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் நடப்பது கிடையாது. மாற்றாக லிங்க வடிவில் உள்ள ஆவுடையாருக்கு அபிஷேகங்கள் நடைபெறும். மேலும் இங்கு மற்ற கோவில்களைப் போல அம்மனுக்கு என்று தனியாக சந்நிதி கிடையாது.




மற்ற கோவில்களைப் போல் விநாயகர், முருகன், போன்ற கடவுள்களும் இங்கு காட்சி தருகின்றனர். முதல் பிரகாரத்தின் ஈசான மூலையில் நிலாத்துண்ட பெருமாள் சந்நிதி அமைந்த்துள்ளது. மேலும் இந்தக் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது.


வரலாறு:
முதன் முதலில் பல்லவர்களே இந்தக் கோயிலை கட்டியுள்ளனர் என்பதற்கு சான்றாக பல்லவர் கால சிற்பங்களும் கல்வெட்டுகளும் இங்கு உள்ளன. பின்னர் சோழர்களால் புணரமைக்கப்பட்டு கோவில் வளர்ச்சியடைந்தது. மேலும் அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், ஞானசம்பந்தர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற தலம் இது. பழங்கால சமயம் சார்ந்த நூல்களில் இந்தக் கோவில் திருக்கச்சிஏகம்பம் என்னும் பெயரால் குறிப்பிடப்பட்டு வந்தது.


இந்தக் கோவிலின் கிழக்கு கோபுரமான இராஜ கோபுரம், 58.5 மீட்டர் உயரமும் ஒன்பது அடுக்குகளையும் கொண்டது. இதனை விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயர் கி.பி 1509 ஆம் ஆண்டு கட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கோவிலில் உள்ள ஆயிரம் கால் மண்டபத்தையும் கிருஷ்ணதேவராயரே கட்டியுள்ளார். இந்தக் கோவிலில் மொத்தம் ஐந்து பிரகாரங்கள் உள்ளன.


ஸ்தலவிருட்சம்:
ஒவ்வொரு கோவிலுக்கு ஸ்தலவிருட்சம் என்று ஒரு மரம் உண்டு, அந்த வகையில் இந்தக் கோவிலில் ஸ்தலவிருட்சம் என போற்றப்படுவது 3500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாமரம். இந்த மாமரத்தில் நான்கு கிளைகள் உள்ளன. வெவ்வேறு காலங்களில் இந்த மாமரத்தில் உள்ள நான்கு கிளைகளில் நான்கு விதமான மாம்பழங்கள் உருவாகும் என்பது இதன் சிறப்பு. இந்த நான்கு கிளைகளும் ரிக், யஜுர், சாம, அதர்வண எனும் நான்கு வேதங்களை குறிக்கின்றன.


தலவரலாறு:
பார்வதி திருக்கைலாயத்தில் சிவபெருமானின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து உலகத்துக்கு வெளிச்சம் தந்தார். இந்த தவற்றினால் பார்வதியை உலகத்துக்குச் சென்று தன்னை நோக்கி தவம் இருக்கச் சொன்னார் சிவபெருமான். பார்வதியும் காஞ்சிபுரத்தில் கம்பா நதிக்கரையில் ஒரு மாமரத்தின் அடியில் மணல் லிங்கம் செய்து பூஜித்தார். பார்வதியின் தவத்தை உலகினுக்கு அறியச் செய்ய சிவபெருமான் கம்பா நதியில் வெள்ளத்தை உண்டாக்கினார். பார்வதி தனது மணல் லிங்கத்தை வெள்ளம் அடித்து செல்லாமல் இருக்க கட்டி அணைத்துக் கொண்டார். உடனே சிவபெருமான் அந்த மாமரத்தின் அடியில் தோன்று பார்வதிக்கு அருள் புரிந்து, இரண்டு படி நெல்லைக் கொடுத்து காமாட்சி என்ற பெயரில் காமகோட்டத்தில் 32 அறங்களைச் செய்ய பணித்தார். பார்வதி வழிபட்ட மணல் லிங்கம் தான் பிரித்வி லிங்கம், அந்த மாமரம் தான் ஸ்தல விருட்சம். காமகோட்டம் தான் காமாட்சி அம்மன் கோவில். பார்வதி கட்டித் தழுவியதால் இங்கு உள்ள சிவபெருமானை தழுவக் குழைந்தார் என்றும் அழைப்பர்.


சுந்தரமூர்த்தி நாயனார் சங்கிலி நாச்சியாரை மணந்த போது "உன்னைப் பிரியேன்" என்று சிவனை சாட்சியாக வைத்து சத்தியம் செய்தார். அந்த சத்தியத்தை மீறியதால் அவர் கண் பார்வை இழந்தார். இழந்த பார்வையில் இடக்கண் பார்வையை சுந்தரர் இங்கு பதிகம் பாடி பெற்றதாக வரலாறு உண்டு.


விழாக்கள்:
இந்தக் கோவிலில் தினமும் ஆறு கால பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும் ஆனித் திருமஞ்சனம், ஆடிக் கிருத்திகை, ஆவணி மூலம், நவராத்திரி, பங்குனி உத்திரம், சித்ரா பெளர்ணமி, வைகாசி விசாகம் போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன.


கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை.


எப்படி செல்வது:
1) காஞ்சிபுரம் சென்னைக்கு அருகில் உள்ளதால், சென்னை மற்றும் தமிழக்த்தின் பல பகுதிகளில் இருந்து பேருந்து வசதி உள்ளது.


2)காஞ்சிபுரத்திற்கு சென்னை, திருப்பதி, அரக்கோணம், செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இருந்து பயணிகள் ரயில் இயக்கப்படுகின்றன.


3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 56 கி.மீ தொலைவில்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில்

Author: முகேஷ் .M // Category:

அருணாச்சலேஸ்வரர் கோவில் தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. பஞ்சபூதஸ்தலங்களுள் இந்தக் கோவிலும் ஒன்று. பஞ்ச பூதங்களுள் ஒன்றான நெருப்பை குறிக்கிறது இந்தக் கோவில். இங்கு இருக்கும் சிவபெருமான் அருணாச்சலேஸ்வரர் அல்லது அண்ணாமலையார் என்றும், அவரது துணைவியார் உண்ணாமலை என்றும் அழைக்கப்படுகின்றனர்.

வரலாறு:



மொத்தம் 24 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கோவில் கிட்டத்தட்ட 2000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்திருக்கலாம் என்று வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.
இக்கோவிலில் உள்ள ஆயிரம்கால் மண்டபத்தையும், சிவகங்கை குளத்தையும் கிருஷ்ணதேவராயரும், கிளி கோபுரத்தை கி.பி 1053 ஆம் ஆண்டு ராஜேந்திர சோழனும், பிரம்ம தீர்த்தத்தை கி.பி 1230ஆம் ஆண்டு வேணுதாயனும், வள்ளால கோபுரத்தை கி.பி 1320 ஆம் ஆண்டு வள்ளால மஹாராஜாவும் கட்டியுள்ளனர்.



மேலும் இக்கோவில் உருவாக குலோத்துங்கன், ராஜேந்திரசோழன், கோப்பெரும்சிங்கன், ஆதித்ய சோழன், மங்கையர்க்கரசி, விக்கிரம பாண்டியன், அம்மானை அம்மாள் ஆகியோரும் காரணமாக இருந்துள்ளனர். சேர, சோழ, பாண்டியர்களால் உருவாக்கப்பட்ட பெருமைக்குரியது இந்த திருவண்ணாமலை.




பின்னர் 19 மற்றும் இருபதாம் நூற்றாண்டுகளில் பல நகராத்தார்களினால் இந்தக் கோவில் புதுப்பிக்கப்பட்டு 1903, 1944, 1976, 2002 ஆகிய ஆண்டுகளில் கும்பாபிஷேகமும் நடைபெற்றது.



கட்டிடக்கலை:
பெரிய மலைக்கு நடுவே மொத்தம் ஆறு பிரகாரங்களும், ஒன்பது கோபுரங்களுடனும் பிரமாண்டமாய் காட்சியளிக்கிறது இந்தக் கோவில். கோவிலின் உள்ளே நுழைவதற்கு நான்கு கோபுரங்களும், கோவிலின் உள்ளே ஐந்து கோபுரங்களும் உள்ளன. கோவிலின் பிரதான கோபுரமான கிழக்கு கோபுரம் 217 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது.

கோவிலின் உள்ளே சிவகங்கை தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என இரண்டு குளங்களையும் காணலாம். கோவில் மிகப் பெரியது என்பதால் ஒவ்வொரு பிரகாரத்திலும் என்னென்ன இருக்கிறது என்பதை இனி காண்போம்.

ஆறாம் பிரகாரம்: கோவிலின் உள்ளெ நுழைவதற்கான நான்கு கோபுரங்கள் உள்ளன.

ஐந்தாம் பிரகாரம்: கம்பத்து இளையனார் சந்நிதி, ஆயிரம் கால் மண்டபம், ஸ்ரீபாத லிங்கம், சிவகங்கை தீர்த்தம், விநாயகர் சந்நிதி, அருணகிரிநாதர் மண்டபம், வள்ளால மஹாராஜ கோபுரம் ஆகியவற்றை காணலாம்.

நான்காம் பிரகாரம்:


கால பைரவர் சந்நிதி, பிரம்ம தீர்த்தம், புரவி மண்டபம், சக்தி விலாசம், கருணை இல்லம், பிரம்ம தீர்த்தத்திற்கு அருகில் பிரம்ம லிங்கம், வித்யாதரேஸ்வரர் லிங்கம், விநாயகர், நலேஸ்வர லிங்கம், யானை திரை கொண்ட விநாயகர், பிச்சை இளையனார் ஆகியவற்றை கண்டுகளிக்கலாம்.




மூன்றாம் பிரகாரம்: கிளி கோபுரம், தீப தரிசன மண்டபம், சம்பந்த விநாயகர், ஸ்தல விருட்சமான மகிழ மரம், கல்யாண மண்டபம், வசந்த மண்டபம், காலத்தீஸ்வரர் சந்நிதி, யாகசாலை, பிடாரி அம்மன சந்நிதி, கல்லால் ஆன திரிசூலம் ஆகியவைகளையும், சிதம்பரம் சிதம்பரேஸ்வரர், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர், காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் சந்நிதிகளையும் மூன்றாம் பிரகாரத்தில் காணலாம்.

இரண்டாம் பிரகாரம்: அறுபத்தி மூவர், சோமாஸ்கந்தர், வேணுகோபாலர், ஆறுமுகர், லிங்கோத்பவர், தக்ஷிணாமூர்த்தி, பைரவர், கஜலக்ஷ்மி, நடராஜர், துர்கை, சண்டிகேஸ்வரர் ஆகிய தெய்வங்களையும் இரண்டாம் பிரகாரத்தில் வணங்கலாம். பள்ளியறையும் இந்த பிரகாரத்தில் உள்ளது.


முதல் பிரகாரம்: கோவிலின் முக்கிய கடவுளான அருணாச்சலேஸ்வரை இங்கு தரிசிக்கவேண்டும். இங்கிருந்து மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள உண்ணாமுலை அம்மனை தரிசிக்கவும் வழி உள்ளது.

சிற்பக்கலை:
இங்கு உள்ள கிழக்கு கோபுரத்தில் நடன சிற்பங்களை காணலாம். மேலும் இந்தக் கோவிலில் இருந்து ஏராளமான கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகின்றன. இதுவரை 119 கல்வெட்டுகள் படியெடுக்கப்பட்டுள்ளன.

தல வரலாறு:
படைக்கும் பிரம்மாவும், காக்கும் விஷ்ணுவும் யார் உயர்ந்தவர் என்று சண்டையிட்டுக் கொண்டனர். இந்த சண்டையை முடிவுக்கு கொண்டுவர சிவபெருமான் இருவரையும் அழைத்து தனது அடியையோ அல்லது முடியையோ காண்பவரே சிறந்தவர் எனக் கூறி ஜோதியாக மாறி ஓங்கி உயர்ந்து நின்றார். விஷ்ணு வராக அவதாரம் எடுத்து பூமியைக் குடைந்து அடியைக் காண முயற்சி செய்தார். பிரம்மா அன்னப் பறவையாக மாறி முடியைக் காண பறந்தார். இருவராலும் அடியையும் முடியையும் காண இயலவில்லை.

பிரம்மா ஒரு தாழம்பூவை அழைத்து தான் முடியைக் கண்டுவிட்டதாக பொய் சாட்சி கூறச் சொன்னார். அதுவும் அப்படியே செய்தது. இதனால் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மாவுக்கென்று இந்த உலகத்தில் தனியே கோவில் வைக்கக்கூடாது என்றும், தாழம்பூவை பூஜைக்கு பயன்படுத்தக்கூடாது என்றும் சபித்தார்.

சிவபெருமான் பிரம்மாவுக்கும், விஷ்ணுவுக்கும் ஜோதியாக காட்சியளித்த இடமே திருவண்ணாமலை ஆகும். இங்கு காணப்படும் மலையான அண்ணாமலை க்ருத்யுகத்தில் நெருப்பாகவும். த்ரேதாயுகத்தில் மாணிக்கமாகவும், த்வப்ரயுகத்தில் தங்கமாக இருந்ததாகவும் சொல்லப்படுவதுண்டு. தற்போது கலியுகத்தில் கல்லாக உள்ளது. பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் சிவலிங்கமாக காட்சியளித்த இடத்தில்தான் தற்போது அருணாச்சலேஸ்வரர் கோவில் உள்ளது.

அண்ணா என்றால் 'நெருங்கவே முடியாது' என்று அர்த்தம். பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடியையும் முடியையும் நெருங்கமுடியாத நெருப்பு மலை என்பதால் அண்ணாமலை என்ற பெயர் வந்தது.

ஒருமுறை பார்வதி திருக்கைலாயத்தில் சிவனின் கண்களை விளையாட்டாக மூடியதால் உலகம் இருளில் மூழ்கியது. இந்த தவற்றிற்காக காஞ்சிபுரத்தில் மண்ணால் லிங்கம் செய்து வழிபட்டார் பார்வதி. அச்சமயத்தில் சிவபெருமான் தோன்றி அவரை திருவண்ணாமலைக்குச் சென்று வழிபடும்படி பணித்தார். அங்கு பவளக் குன்றில் கெளதம முனிவரின் உதவியோடு பார்வதி மேற்கொண்ட தவத்தை மஹிசாசுரன் என்னும் அரக்கன் தடுத்தான். இதனால் கோபமுற்ற பார்வதி துர்கை வடிவம் கொண்டு அவனை அழித்தாள். பின்னர் சிவபெருமான ஜோதி வடிவில் பார்வதிக்கு காட்சி தந்து பார்வதிக்கு தன் உடம்பின் இடப்பக்கத்தை தந்து அர்த்தநாரியாக மாறினார் என்றும் கூறப்படுவதுண்டு.

கிரிவலம்:
இங்கு உள்ள 2668 அடி உயர மலை லிங்கம் போல் காட்சிதருகிறது. மலையின் கீழ்த்திசையில் இருந்து பார்த்தால் ஒன்றாகவும், சுற்றும் வழியில் இரண்டாகவும், மேற்கு திசையில் மூன்றாகவும், முடிவில் ஐந்து முகங்களாகவும் காட்சி தருகிறது இந்த மலை. இப்படி சிறப்பு வாய்ந்த மலையை சுற்றி வருவதால் நிறைய பயன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. பெளர்ணமி நாட்களில் நிலவின் ஒளி மலையில் இருக்கும் மூலிகைச் செடிகள்மீது பட்டு பிரதிபலிக்கும். அப்படி பிரதிபலிக்கும் ஓளிக்கதிர்கள் நம் உடலுக்கும் உள்ளத்திற்கும் நன்மை பயக்கும். எனவே பெளர்ணமி நாளில் கிரிவலம் வருவது சிறப்பு.




14 கி.மீ நீளமுடைய கிரிவலப் பாதையில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருத்தி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகிய எட்டு லிங்கங்கள் எட்டுத் திசைகளிலும் உள்ளன. மாணிக்கவாசகரை சிறப்பிக்கும் வகையில் கிரிவலப் பாதையில் அடி அண்ணாமலையில் ஒரு கோவிலையும் காணலாம். இரவில் கிரிவலம் செல்ல பாதை முழுவதும் விளக்குகளும் உள்ளன.

சிறப்புகள்:
காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தில் வழிபட்டால் முக்தி ஆனால் திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலம் என்று கூறப்படுகிறது.

அருணகிரிநாதர் பிறந்து வளர்ந்த இடம் திருவண்ணாமலை. அவர் தற்கொலை செய்ய முயன்றபோது முருகனே நேரில் வந்து காட்சியளித்து அவரை திருப்புகழ் பாடச்சொன்ன தலம் இந்த திருவண்ணாமலை. மேலும் ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள் போன்றோரும் இடைக்காட்டு சித்தர் போன்ற சித்தர்களும் வாழ்ந்த இடம்.

அப்பர், ஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்ற தலம். மாணிக்கவாசகர் இங்கு இருந்து திருவெம்பாவையையும், திருஅம்மானையையும் இயற்றினார் என்று சொல்வர்.

மூன்றாம் பிரகாரத்தில் உள்ள ஸ்தல விருட்சமான மகிழ மரத்தின் கீழ் இருந்து பார்த்தால் கோவிலின் அனைத்து கோபுரங்களையும் காணலாம்.


விழாக்கள்:
அனைத்து கோவில்களைப் போல் தினமும் ஆறு கால பூஜைகள் இங்கும் நடைபெறுவதுண்டு. சித்திரை மாதம் வசந்த உற்சவம், ஆனி மாதம் பிரமோத்சவம், ஆடி பூரம், நவராத்திரி, தை மாதம் உத்திராயன புன்னிய கால பிரமோத்சவம், திருவூடல் திருவிழா, மாசி மாதம் மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் இங்கு நடைபெறுகின்றன.

சிவன் பிரம்மாவிற்கும், விஷ்ணுவுக்கும் பார்வதிக்கும் ஜோதியாக காட்சியளித்ததை கொண்டாடும் வகையில் கார்த்திகை மாதம் பத்து நாட்கள் கார்த்திகை தீப உற்சவமும் நடைபெறும். இந்த திருவிழாவின் போது போன வ்ருடம்(2009) முப்பது லட்சம் மக்கள் திரண்டு ஜோதி வடிவான அண்ணாமலையாரை வழிபட்டனர்.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 3.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை.

தங்கும் இடங்கள்:
எங்கும் காணாத வகையில் இங்கு கோவிலிலேயே தங்கும் வசதிகள் உள்ளன. இங்கு உள்ள அப்பர் இல்லத்தில் தங்குவதற்கு நாள் ஒன்றுக்கு நூறு ரூபாயும், உண்ணாமுலை அம்மன் இல்லத்தில் தங்குவதற்கு ஐம்பது ரூபாயும் வசூலிக்கப்படுகின்றன.

எப்படி செல்வது?
1) திருவண்ணாமலைக்கு சென்னை, வேலூர், கடலூர், திருச்சி, விழுப்புரம், சிதம்பரம் போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.

2)அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டிவனம் 60 கி.மீ தொலைவில்.

3)அருகில் உள்ள விமான நிலையம் - சென்னை 185 கி.மீ தொலைவில்.

"தமிழக சுற்றுலா" பழநி முருகன் கோவில்

Author: முகேஷ் .M // Category:

தமிழகத்தில் உள்ள மலைக்கோவில்களில் பழநி முருகன் கோவிலும் ஒன்று. பழநி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவில் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. முருகனுக்கு உரிய அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடு பழநி ஆகும்.


கோவில் அமைந்திருக்கும் மலையின் உயரம் 150 மீ. மொத்தம் 693 படிக்கட்டுகள் ஏறினால் கோவிலை அடைந்துவிடலாம். மலையைச் சுற்றி 2.4 கி.மீ கிரிவலப் பாதை உள்ளது. இனி கோவிலைப் பற்றி பார்க்கலாம்.




தல வரலாறு:
இந்தக் கோவிலின் வரலாறு ஞானப்பழத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. கலகம் பண்ணுவதற்கென்றே பிறந்தவர் நாரதர். ஞானப்பழத்தை எடுத்துக்கொண்டு கைலாச மலையில் இருக்கும் சிவபெருமானையும் பார்வதியையும் காண சென்றார். பழத்தை கொடுத்து இந்தப் பழத்தை உண்டால் அதிக ஞானம் பெறலாம் என்று கூறினார். மேலும் முழுப்பழத்தையும் ஒருவரே உண்ணவேண்டும் என்றும் விதி விதித்தார். சிவபெருமானோ தன் மகன்களான முருகனுக்கும், பிள்ளையாருக்கும் பகிர்ந்தளிக்க விரும்பினார்.


பின்னர் தன் மகன்கள் இருவரையும் அழைத்து உலகத்தை மூன்று முறை சுற்றி முதலில் வருபருக்கு ஞானப்பழம் பரிசு என்றார் சிவபெருமான். இதனைக் கேட்டு முருகன் தன் வாகனமான மயிலை எடுத்துக்கொண்டு உலகத்தை சுற்ற கிளம்ப, பிள்ளையாரோ தந்தையும் தாயுமே உலகம் என்று கூறி சிவபெருமானையும் பார்வதியையும் சுற்றி வந்து ஞானப்பழத்தை பெற்றுக்கொண்டார். உலகத்தை வலம் வந்து ஞானப்பழத்தை கேட்ட முருகன், நடந்தது அறிந்து, கோபமுற்று இந்த மலையில் வந்து தங்கிவிட்டார்.




சிவனும் பார்வதியும் இங்கு வந்து முருகனை சமாதானபடுத்தினர். ஞானப்பழமான உனக்கு எதற்கு இன்னொரு பழம் என்று கூறி சமாதானம் செய்தனர். முருகனை "பழம் நீ" என்றதால் இந்த இடம் பழநி என பெயர் பெற்றது. மலை அடிவாரத்தில் திருஆவினன்குடி குழந்தை வேலாய்தசுவாமி கோவிலும் உள்ளது. இந்தக் கோவிலே அறுபடை வீடுகளில் மூன்றாவதாக் கருதப்ப்டுவது.


அமைவிடம்:
இதற்கும் ஒரு கதை உண்டு. அகஸ்திய மாமுனிவர் தன் இருப்பிடத்திற்கு சிவகிரி, சக்திகிரி என்னும் இரண்டு மலைகளை எடுத்துச் செல்ல விரும்பினார். தன் சேவகனான இடும்பனிடம் இந்த மலைகளை தூக்கி வரச்சொன்னார். அவனும் காவடி போல் இரண்டு மலைகளையும் கம்பில் கட்டி தோளில் சுமந்து சென்றான். செல்லும் வழியில் தூக்கமுடியாமல் சோர்வுற்று மலையைக் கீழே வைத்தான். அச்சமயம் பார்த்து முருகன் ஞானப்பழம் கிடைக்காத கோபத்தில் சிவகிரி மலையின் மீது ஏற, இடும்பனால் மலையை தூக்க முடியவில்லை. கோபமுற்ற முருகன் இடும்பனை அழிக்க, இடும்பன் இறந்தான்.




பின்னர் இடும்பனை தன் பக்தனாக ஏற்றுக் கொண்டான் முருகன். இடும்பனைப் போல் காவடி சுமந்து தன்னை வழிபடுவருக்கு சகல செளபாக்கியங்களும் உண்டாகும் என வரமளித்தான். இன்றும் மலை ஏறும் வழியில் இடும்பனுக்கு கோவில் உண்டு.


மூலவர் சிற்பம்:
இங்கு இருக்கும் மூலவர் சிலை பதினெட்டு சித்தர்களுள் ஒருவரான போகர் என்பவரால் உருவாக்கப்பட்டது. 4448 அறிய மூலிகைகளை கொண்டு இவர் ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை உருவாக்கினார். பின்னர் இந்த ஒன்பது விதமான நஞ்சு பொருட்களை கலந்து நவபாஷானம் என்னும் மூலிகையை உருவாக்கினார். பல்வேறு நோய்களுக்கு இந்த மூலிகையை பயன்படுத்தலாம் என்றும் கண்டறிந்தார்.




அப்படி சிறப்பு வாய்ந்த நவபாஷாணத்தைக் கொண்டு முருகன் சிலையை அவர் உருவாக்கினார். அவர் உருவாக்கிய அந்த சிலையே தற்போது பழநி முருகனாக நமக்கு காட்சியளிக்கிறது.


பஞ்சாமிர்தத்தாலும், பாலாலும் அபிஷேகம் செய்தால் மருந்து வெளிவரும் என்பதை உணர்ந்து, தினமும் சிலைக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தார் போகர். தன்னுடையே சமாதியை போகர் பழநி கோவிலிலேயே அமைத்துக்கொண்டார்.


சிறப்புகள்:
கையில் கோலுடன் ஆண்டியை காட்சியளிக்கும் முருகன் சிலை நமக்கு உணர்த்துவது யாதென்றால் "அனைத்தையும் துறந்தால் கடவுளை அடையலாம்" என்பதாகும்.




முன்னர் கோவில் மூலவர் சிலை காணமல் போயிற்று. அச்சமயம் முருகன் அவ்வழியே வந்த சேர மன்னன் சேரமான் பெருமாள் கனவில் தோன்றி, சிலையை மீட்டு மலை மீது கோவில் அமைக்குமாறு கட்டளையிட்டான். அதன் பின்னர் சேர மன்னனே இந்தக் கோவிலை கட்டினான் என்ற வரலாறும் உண்டு.


பெரும்பாலும் தமிழக கோவில்களில் மூலவர் சிலை கிழக்கு பார்த்தே அமைந்திருக்கும். ஆனால் இங்கு வடக்கு பார்த்து அமைந்துள்ளது. இதற்கு காரணம் சேர மன்னர்கள் வடக்கு திசையில் ஆதிக்கம் செலுத்தியதே!


பூஜைகள் மற்றும் விழாக்கள்:
தினசரி இங்கு ஆறு கால பூஜைகள் நடைபெறுகிறது. விழாக்களை பொறுத்த வரையில் தைப்பூசம், பங்குனி உத்திரம், வைகாசி விசாகம், ஆடி கிருத்திகை, கந்த சஷ்டி விழா ஆகிய விழாக்கள் இங்கு சிறப்பாக கொண்டாடப்படும்.


பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் பொருட்டு இங்கு தங்கத் தேர் பவனியும் தினந்தோறும் மாலை நடைபெறுகிறது. வேண்டியவர்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம்.


பழநி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கும் மற்ற கோவில்கள்:
  • திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவில், பழநி அடிவாரம்.
  • பெரிய நாயகி அம்மன் கோவில், அடிவாரத்தில் இருந்து 2 கி.மீ தொலைவில்.
  • மாரியம்மன் கோவில்
  • பெரிய ஆவுடையார் கோவில், சண்முக நதி அருகில்.
  • குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல்.
  • வேலப்பர் கோவில், கொடைக்கானல்.
வசதிகள்:
  • வழிபாடு செய்ய ஏற்ற வகையில் பொது தரிசன வழி மற்றும் சிறப்பு தரிசன வழிகள் உள்ளன.
  • முடிக்காணிக்கை செலுத்துவதற்கு அடிவாரத்தில் பல்வேறு இடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • பழநியின் சிறப்பான பஞ்சாமிர்தத்தை வாங்க மலையிலும் அடிவாரத்திலும் கடைகள் உள்ளன.
  • பக்தர்கள் தங்குவதற்கு ஏற்ப தண்டபானி நிலையம், கார்த்திகேயன் விடுதி, கோஷால விடுதி, வேலவன் விடுதி ஆகியனவும் உள்ளன.

எப்படி செல்வது?
  • பழநிக்கு திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், சென்னை, கொடைக்கானல், தாராபுரம், பொள்ளாச்சி, கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் உண்டு.
  • அருகில் உள்ள ரயில் நிலையம் - திண்டுக்கல், 48 கி.மீ தொலைவில்.
  • அருகில் உள்ள விமான நிலையம் - மதுரை, 85 கி.மீ தொலைவில்.
மலையேறுவதற்கு படிக்கட்டுகள், யானைப் பாதை, வின்ச் ரயில், ரோப் கார் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில்

Author: முகேஷ் .M // Category:

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் - Madurai Meenakshi Amman Temple

ஏழு உலக அதிசயங்களுள் ஒன்றாக தேர்வு செய்யப்படவிருந்த கோவில் இது. அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோவில் தமிழகத்தின் தூங்காநகரமான மதுரை மாநகரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் சுந்தரேஸ்வரர் ஆவார். சிவபெருமானுக்கு உகந்தது சிதம்பரம் கோவில் என்றால், மீனாட்சி அம்மனுக்கு பெருமை சேர்ப்பது மதுரை.



இந்தக் கோவில் 1600 ஆண்டு கால பழமை வாய்ந்தது. மேலும் சிவபெருமான் நடராஜராக நடனம் ஆடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. இது ரஜத(வெள்ளி) சபையாகும். இக்கோவில் நடராஜர் வெள்ளியால் செய்யப்பட்டவர். மற்ற நான்கு இடங்களிலும் வலது காலை தூக்கி ஆடிய சிவபெருமான், மதுரையில் மட்டும் பாண்டிய மன்னனுக்காக இடது காலை தூக்கி ஆடினார்.

இக்கோவிலின் தல விருட்சம் கடம்ப மரம். தீர்த்தம் பொற்றாமரை குளமும், வைகை நதியும். இக்கோவிலில் சிறப்பு வாய்ந்த முக்குருணி விநாயகர் சந்நிதியும் உள்ளது.




தல வரலாறு:
மலயத்துவச பாண்டியனும் அவன் மனைவி காஞ்சனமாலையும் புத்திர யாகம் செய்த போது, அக்னியில் இருந்து பார்வதி தேவி குழந்தையாகத் தோன்றினாள். முன்ஜென்மத்தில் காஞ்சனமாலைக்கு செய்து கொடுத்த சத்தியத்தின் காரணமாக பார்வதி தேவி அக்னியில் இருந்து வெளிப்பட்டதாக சிலர் கூறுவர். அக்னியில் இருந்து தோன்றிய பார்வதிக்கு மூன்று மார்பகங்கள் இருந்தன, இதனைக் கண்டு அதிர்ச்சியுற்றான் பாண்டிய மன்னன். அப்போது ஒரு குரல் ஒலித்தது. அவள் எப்போது தன் கணவனை காண்கிறாளோ அப்போது அந்த மூன்றாவது மார்பு மறைந்துவிடும் என்று அந்த குரல் கூறியது. பாண்டியன் மன்னன் மனமகிழ்ச்சியுடன் அந்த குழந்தைக்கு தடாகை என்று பெயரிட்டு வளர்த்து வந்தான். அக்குழந்தை போர்க்கலை,சிற்பக்கலை, குதிரையேற்றம் முதலான ஆய கலைகள் அறுபத்து நான்கையும் கற்று வளர்ந்தாள்.


தடாகைக்கு முடிசூட்ட நினைத்தான் பாண்டிய மன்னன். அக்கால வழக்கப்படி அவள் மூவுலகிலும் எட்டுத்திசையிலும் போரிட்டால்தான் மூடிசூட்டிக்கொள்ளமுடியும். எனவே போருக்கு சென்று தடாகை, பிரம்மன் வீற்றிருக்கும் சத்தியலோகத்தையும், திருமால் வீற்றிருக்கும் வைகுந்த்தத்தையும் வென்றாள். கைலாசத்துக்கு சென்ற போது அங்கிருந்த சிவபெருமானைக் கண்டு வெட்கப்பட்டாள், அவளுடைய மூன்றாவது மார்பு மறைந்துவிட்டது. இதன் காரணத்தை அறிந்த தடாகை, தான் பார்வதியின் மறுவடிவம் என்பதை உணர்ந்து கொண்டாள். சிவபெருமானுடன் மதுரை வந்து மூடிசூட்டிக்கொண்ட பின்னர் சிவபெருமானையே மதுரையில் திருமால் தலைமையில் திருமணம் செய்துகொண்டாள்.



கட்டிடக்கலை:
மதுரை மாநகரத்தின் மத்தியில் அமைந்துள்ள இந்தக்கோவிலுக்கு மொத்தம் நான்கு நுழைவாயில்கள் உள்ளன. பழங்கால தமிழ் நூல்களின் சான்றுகளின் படி இக்கோவில் மதுரையின் மத்தியிலும், கோவிலைச் சுற்றி உள்ள தெருக்கள் தாமரை இதழ்கள் வடிவிலும் அமைந்துள்ளனவாம்!! இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியவில்லை.

கோவிலின் மொத்த பரப்பளவு, 45 ஏக்கர். இந்தக்கோவிலில் மொத்தம் 12 கோபுரங்கள் உள்ளன. அதில் நான்கு கோபுரங்கள் நான்கு திசைகளை நோக்கி உள்ள நுழைவாயில்கள். இந்த பன்னிரெண்டு கோபுரங்களுள் தெற்கு கோபுரம் மிக உயரமானது. ஒன்பது அடுக்குகளை உடைய தெற்கு கோபுரத்தின் உயரம் 52 மீ.

இங்குள்ள கோபுரங்கள் பல்வேறு மன்னர்களால் பல்வேறு காலங்களில் கட்டப்பட்டவை. கடைசியில் தேவகோட்டை நகரத்தாரால் பழுதுபார்க்கப்பட்டு புதுப்பிக்கப்பட்டது. மீனாட்சி அம்மன் கோபுரம் காளத்தி முதலியார் என்பவரால் கி.பி. 1570ல் கட்டப் பெற்று 1963 ஆம் ஆண்டில் சிவகங்கை அரசர் சண்முகத்தால் புதுப்பிக்கப்பட்டது.. சுவாமி கோபுரம் கி.பி. 1570 ஆம் ஆண்டில் கட்டப் பெற்று திருமலைகுமரர் அறநிலையத்தால் பழுதுபார்க்கப்பட்டது. மேலும் மூலவருக்காக இரண்டு கோபுரங்கள் உள்ளன, அவை இரண்டும் தங்கத்தால் வேயப்பட்டவை.


மேலும் இங்கு பொற்றாமரைக் குளமும் உள்ளது. இந்தக் குளத்தில் தங்கத் தாமரை உள்ளது. முன்னர் சிவபெருமான் ஒரு நாரைக்கு இங்கு கடல்வாழ் உயிரினங்கள் வாழாது என்று வாக்கு அளித்ததால் இந்தக் குளத்தில் மீன்கள் கூட வாழ்வது இல்லை. மேலும் இந்தக் குளம் நல்ல நூல்களை தேர்ந்தெடுக்கும் சக்தி படைத்தது என்றும் நம்புகிறார்கள். நூல்கள், ஓலைச்சுவடிகளை இந்தக் குளத்தில் போடவேண்டும், அவை நல்ல நூல்கள் என்றால் மிதக்கும் இல்லையேல் மூழ்கிவிடும்.

கோவிலில் உள்ள மண்டபங்கள்:
  • அஷ்ட சக்தி மண்டபம்
  • மீனாட்சி நாயக்கர் மண்டபம்
  • ஊஞ்சல் மண்டபம்
  • ஆயிரங்கால் மண்டபம்
  • வசந்த மண்டபம்
  • கம்பத்தடி மண்டபம்
  • கிளிக்கூடு மண்டபம்
  • மங்கையர்க்கரசி மண்டபம்
  • சேர்வைக்காரர் மண்டபம்
இங்கு உள்ள ஆயிரங்கால் மண்டபத்தில் 985 தூண்களும் நடுவில் நடராஜர் சிலையும் உள்ளது. இதை மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரானின் அமைச்சர் அரியநாத முதலியார் கட்டினார்.

சிற்பக்கலை:
ஆயிரங்கால் மண்டபத்தில் பல ஒலிகளைத் தரும் சிலைகள் தூண்களில் செதுக்கப்பட்டுள்ளன. வடக்கு கோபுரத்திற்கு அருகில் ஐந்து இசைத் தூண்கள் உள்ளன. அஷ்ட சக்தி மண்டபத்தில் கலைநயமிக்க எட்டு அம்மன் சிலைகள் உள்ள்ன. இதுமட்டுமல்லாமல் கோவில் கோபுரங்கள், தூண்கள் பலவற்றிலும் பாண்டிய சிற்பிகளின் சிற்பக்கலையை காணமுடியும்.


கிழக்கு கோபுரத்திற்கு அருகில் உள்ள புதுமண்டபத்தில் தலவரலாற்றை விளக்கும் சிற்பங்கள் செதுக்கப்ட்டுள்ளன. சுவாமி சந்நிதியை சுற்றியுள்ள பிரகாரத்தில் சிவபெருமானின் 64 திருவிளையாடல்களும் சிற்பங்களாக காட்சியளிக்கின்றன.

திருவிழாக்கள்:
இங்கு நடைபெறும் சித்திரைத் திருவிழா மிகப் பிரசித்தி பெற்றது. ஆனி மாதம் ஊஞ்சல் உற்சவம், ஆவணி மூலம், நவராத்திரி விழா, கார்த்திகை தீபத்திருவிழா, மார்கழி உற்சவம், தை தெப்பம், பங்குனி உத்திரம் ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.


ஆவணி மாத திருவிழா, சிவபெருமானின் 64 திருவிளையாடல்களை கொண்டாடும் விழாவாகும். சித்திரைத் திருவிழா, கோவிலின் தலவரலாற்றை எடுத்துரைக்கும் திருவிழாவாகும்.

கோவில் திறந்திருக்கும் நேரம்: காலை 5 மணி முதல் மதியம் 12.30 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை.

எப்படி செல்வது?
  • மதுரைக்கு சென்னை, கோயம்புத்தூர், திருநெல்வேலி, திண்டுக்கல், திருச்சி போன்ற தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து பேருந்து வசது உண்டு.
  • மதுரையில் ரயில் நிலையமும் உள்ளது(MDU)
  • மதுரையில் விமான நிலையமும் உள்ளது. விமான நிலையம், நகருக்கு வெளியில் அமைந்துள்ளது.

மலேசிய முருகன் கோயில்

Author: முகேஷ் .M // Category:






மலேசிய பத்துமலைக் குகை முருகன் கோயில்


உலகின் மிகப்பெரிய முருகன் சிலை
மலேசியாவில் அதிக எண்ணிக்கையிலான தமிழர்கள் (இந்துக்கள்) மட்டுமின்றி சீனர்களும் வந்து வழிபடக்கூடிய கோயில்களில் ஒன்று பத்துமலைக் குகை முருகன் கோயில். இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரை அடுத்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது. இங்குள்ள முருகப் பெருமான் சுப்பிரமணிய சுவாமி என்று அழைக்கப்படுகிறார். இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் இந்துக்கள் தவிர சீனர்களும் தங்கள் குறை தீர வேண்டிக் கொள்வதுடன், இந்துக்களைப் போல் அலகு குத்துதல், காவடி எடுத்தல் போன்ற வேண்டுதலுடன் அந்த நேர்த்திக் கடனையும் செலுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்து மதத்திற்குரிய கோயிலாக இருந்தாலும், மதப்பாகுபாடின்றி அனைவருக்கும் பொதுவானதாகிப் போய் விட்ட இந்தப் பத்துமலைக் குகை முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வருடந்தோறும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
தலவரலாறு
மலேசியாவின் பத்துமலையிலுள்ள சிறிய குகையில் வேல்மாதிரி உருவம் கற்பாறையில் தெரிவதைக் கண்ட ஒரு தமிழ்ப்பக்தர் ஒரு மூங்கிலை நிறுவி அதை வேலாகக் கருதி வழிபட்டு வந்தார். பிறகு உலோகத்திலான வேல் நிறுவப்பட்டு முருகப் பெருமானுக்கு ஆலயம் அமைக்கப்பட்டது என்கிறார்கள். தமிழகத்தில் நாகப்பட்டினத்திற்கு அருகிலுள்ள திருமலைராயன் பட்டினத்தைச் சேர்ந்த காயோராகணம் பிள்ளை மலேசியாவில் குடியேறி நிறைய சம்பாதித்திருக்கிறார். இவர் தான் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை இறைபணிகளுக்காகவும் செலவழித்தார். கோலாலம்பூரில் மாரியம்மன் கோயில், கோர்ட்டு மலைக்குப் பக்கத்தில் விநாயகர் ஆலயம் போன்றவைகளைக் கட்டுவித்த இவர் 1890-91 ஆண்டுகளில் பத்துமலைக் குகை முருகப் பெருமானுக்கும் ஆலயத்தை கட்டியிருக்கிறார். இந்த மூன்று ஆலயங்களிலும் அனைத்து விழா நாட்களிலும் காயோராகணம் பிள்ளை குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே முதல் மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது என்கிறார்கள்.
இந்த பத்துமலையில் இரு குகைகள் உள்ளது. ஒன்று மிக ஆழமாகச் செல்வது, மிகவும் இருண்டது. மற்றொரு குகையில்தான் முருகன் கோயில் கொண்டிருக்கிறார். நக்கீரர் வரலாற்றில் ஒரு பூதம் அவரை ஒரு குகைக்குள் அடைத்து விட்டதாகவும், அங்கு ஏற்கனவே 999 பேர் அடைக்கப்பட்டு இருந்ததாகவும் நக்கீரரையும் சேர்த்து இவர்கள் எண்ணிக்கை ஆயிரமாகிவிட்டதாகவும் நபர்களின் எண்ணிக்கை ஆயிரமான பின்பு இவர்களைத் தின்ன பூதம் திட்டமிட்டிருந்தது என்கிற வரலாறு அனைவரும் அறிந்ததே. ஆயிரம் பேர் அடைத்து வைக்கக் கூடிய அளவிலான குகைகளை உடைய முருகனின் மலைக் கோயில்கள் தமிழ்நாட்டில் எதுவுமில்லை. பூதங்கள் கடல் கடந்து செல்லக் கூடிய ஆற்றலுடையவை என்பதால் நக்கீரர் அடைபட்டுக் கிடந்தது இந்த மலேசிய பத்துமலைக் குகையாகத்தான் இருக்கும். எனவேதான் இங்கு முருகனின் வேல் தமிழ்ப்பக்தர் ஒருவருக்குத் தென்பட்டது. அதன் பிறகுதான் இங்கு முருகன் கோயில் அமைக்கப்பட்டது என்றும் இங்குள்ள ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.

கோயில் அமைப்பு
இந்த முக்கியமான பத்துமலைக் குகை முருகன் கோயில் 1891ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது இந்த முருகனைத் தரிசிக்க கரடுமுரடான பாதையில் செல்ல வேண்டியிருந்தது. அதன் பின்பு 1938 ஆம் ஆண்டில் இந்த மலைக் கோயிலுக்குச் செல்ல 272 படிக்கட்டுகளைக் கொண்ட மூன்று நடைபாதைகள் அமைக்கப்பட்டது. இது தவிர தனியே இரயில் பாதை ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழிகளைப் பயன்படுத்தி தரையிலிருந்து 400 அடி உயரத்தில் உள்ள கோவிலுக்குச் சென்று சுப்பிரமணிய சுவாமியான முருகப் பெருமானைத் தரிசித்து வரலாம்.
மிகப் பெரிய முருகன் சிலை
தற்போது இந்தக் கோயிலுக்குச் செல்லும் பாதைகளுக்கு முன்பாக, அதாவது நுழைவு வாயிலின் அருகில் தங்கம் போல் தகதகவென மின்னும்படியாக வர்ணம் பூசப்பட்ட மிகப் பெரிய முருகன் சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மிகப்பெரிய வேலை வலது கையில் தாங்கி நிற்கும் நிலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலையின் உயரம் 42.7 மீட்டர், அதாவது 140.09 அடி. இந்த சிலை அமைக்க 2003 ஆம் ஆண்டில் துவங்கப்பட்ட பணி 2006 ஆம் ஆண்டில்தான் நிறைவு பெற்றது. இந்த சிலை அமைக்க 2006 ஆம் ஆண்டில் இந்திய மதிப்பில் 2 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவாகி இருக்கிறது. இந்த சிலை அமைப்பிற்கான கட்டுமானப் பொருட்கள் அதிகமாக பக்கத்து நாடான தாய்லாந்தில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது. உலகின் மிகப்பெரிய முருகன் சிலையாக அமைக்கப்பட்ட பின்பு இந்த பத்துமலைக் குகை முருகன் கோயிலுக்கு வருபவர்கள் எண்ணிக்கையுடன் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.
சிறப்பு விழாக்கள்
  • முருகனுக்கு உகந்ததாகக் கருதப்படும் நாட்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
  • இங்கு வருடந்தோறும் தை மாதம் வரும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தைப்பூச விழாவில் இந்துக்கள் தவிர சீனர்கள் மற்றும் வேறு சிலரும் இங்குள்ள புனித ஆற்றில் நீராடிவிட்டு, தமிழ்நாட்டில் முருகன் கோயில்களில் நேர்த்திக் கடன்களாகச் செய்யப்படும் அலகு குத்துதல், பால்குடம் எடுத்தல், காவடி எடுத்தல் போன்ற பலவிதமான நேர்த்திக் கடன்கள் இங்கும் இருக்கிறது. ஆனால் இங்கு தமிழர்களைத் தவிர சீனர்கள் மற்றும் பிற மதத்தைச் சார்ந்தவர்களும் முருகனுக்கு வேண்டிக் கொள்வதும் நேர்த்திக்கடன் செலுத்துவதும் ஆச்சர்யமான ஒன்றாகும்.
சிறப்புக்கள்
  • மலாய்க்காரர்கள் எனப்படும் இசுலாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு வழிபடுவதில்லை என்றாலும் இக்கோவிலையும், இங்குள்ள மிகப்பெரிய முருகன் சிலையையும் சுற்றுலாவாக வந்து பார்த்து வியந்து செல்கின்றனர்.
பயண வசதிகள்
மலேசிய நாட்டின் தலைநகரான கோலாலம்பூரிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் பத்துகுகை அல்லது பத்துமலைக் குகை எனும் இந்தப் பகுதி அந்நாட்டின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இருப்பதால் பயண வசதி சிறப்பாக செய்யப்பட்டிருக்கிறது.