மலைகள் சொல்லும் வரலாறுகள்

Author: முகேஷ் .M // Category:

கடற்கரையும், மலைப்பிரதேசங்களும் நாம் பூமி என்ற கிரகத்தில் வசிக்கிறோம் என்ற உணர்வை உருவாக்குகின்றன. அதிலும் மலைகள் வரலாறுகளை தனக்குள்ளாக பொதிந்து வைத்துள்ளன. "வாழ்க்கை கடற்கரையைப் போன்றதல்ல; அது மலைகளைப் போன்றது.." எனக் கருத்துரைக்கு ஆங்கில வாகசகம் ஒன்றுண்டு. ஆதிகால மனிதர்களின் வாழ்விடமாக திகழ்ந்த மலைகளில், அவர்கள் தீட்டிய ஓவியங்கள்,

எழுத்துக்கள், சிற்பங்கள் என்பன இன்றைக்கும் பழமையான வரலாற்றை நமக்கு சொல்லிக்கொண்டிருக்கின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை கலாச்சார, பண்பாட்டு தலைநகரமாக திகழ்கின்ற மதுரையை சுற்றி 2000ம் ஆண்டுகளுக்கு முற்பட்ட வரலாற்றை தனக்குள் கொண்டிருக்கின்ற மலைகள் அதிகம். யானைமலை, திருப்பரங்குன்றம் மலை, பசுமலை, நாகமலை, பஞ்சபாண்டவர்மலை, அழகர்மலை, போன்ற குன்றுகளும் மலைகளுக்கும் இடையே இருக்கின்ற நகரமாக மதுரை உள்ளது.

சிலமாதங்களுக்கு முன்னால் யானை மலையை சிற்பநகரமாக்குகிறோம் என்ற பெயரில் கிரானைட் முதலாளிகள், தொன்மைவாய்ந்த மலைகளை பணம் கொழிக்கும் இடமாக பார்க்க தொடங்கினார்கள். இதற்கு பொது மக்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இதன் ஒருபகுதியாக இலக்கியவாதியும், சமூகஆர்வலருமான எழுத்தாளர் அ.முத்துக்கிருஷ்ணன், பசுமை பயணம் என்ற பெயரில் மதுரையை சுற்றியுள்ள மலைகளுக்கு, சமுகஆர்வலர்கள் , இயற்கைவிரும்பிகளுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். அந்த பயணத்தில், இணைந்து கொண்டபோது கிடைத்த விவரங்களில் அறிந்தவைகள் இங்கே..

பஞ்சபாண்டவர்மலை

பஞ்சபாண்டவர்மலை தமிழரின் வரலாற்றை சொல்கிற பொக்கிஷமாக உள்ளது. மதுரையிலுருந்து கம்பம் செல்லும் சாலையில் 15- கீமி தொலைவில் உள்ள கொங்கர் புளியங்குளத்தில் அமைந்துள்ளது பஞ்சபாண்டவர்மலை. இந்த மலையில் 2400 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர்பள்ளி உள்ளது. மலையில் இயற்கையாக அமைந்துள்ள குகையில் சமணர்கள்கள் வாழ்ந்திருக்கிறார்கள். இந்த குகையில் 50க்கும் மேற்ப்பட்ட கற்படுக்கைகள் உள்ளன. இந்த குகையின் முகப்பில் இன்றைய தமிழ்மொழியின் தொடக்ககால எழுத்து வடிவங்களில் ஒன்றான தமிழி எழுத்துக்கள் காணப்படுகின்றன. 'குறகொடுபிதவன் உபாச அன் உபறுவ(ன்), குறுகொடல்கு ஈத்தவன் செய் அதன் ஒன், பாகன் ஊர் பே(ர)தன் பிடன் இத்தவெபோன் ' என சமணபள்ளியை உருவாக்கியவர்களின் பெயர்கள் அவை.

இந்த எழுத்துக்களின் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு. குகையின் மறுபுறத்தில் 10ம் நூற்றாண்டை சேர்ந்த மகாவீரரின் புடைப்பு சிற்பம் உள்ளது. சிற்பத்தின் அருகிலேயே தமிழின் மற்றொரு எழுத்துவடிவமான வட்டெழுத்துக்கள் காணப்படுகின்றன.அதில் அந்த சிற்பத்தை செதுக்கியவரான அச்சணத்தி சமணமுனிவரின் பெயர் காணப்படுகிறது. இங்கு வாழ்ந்த சமணர்கள் நிர்வானக்கோலத்திலேயே வாழ்ந்ததால் அமணர்கள் எனவும் அழைக்கப்பட்டனர். இவர்கள் ஊருக்கு வெளியே இருந்த மலைகளிலேயே வாழ்ந்தார்கள். இவர்கள் வாழ்ந்த மலைகளுக்கு அருகில் இருக்கின்ற கிராம மக்களுக்கு கல்வி, மருத்துவம், கால்நடை வளர்ப்பு, விவசாயம் இவற்றை கற்க்கொடுப்பவர்களாக, ஆலோசகர்களாக இருந்தார்கள் .மன்னர்களுக்கு நெருக்கமாக இருந்த வைதிகமதம் கல்வியை பரவலாக்க மறுத்தது.

அமணர்களும்- சமணர்களும்

சமணம் என்பதே பாலி மொழி வார்த்தை. மகாவீரரின் போதனைகளை பின்பற்றுகின்ற சமணர்களுக்கும், பஞ்சபாண்டவர்மலையில் வாழ்ந்தாக கூறபடுகின்ற சணர்களுக்கும் சம்பந்தமில்லை. பஞ்சபாண்டவர்கள் மலையில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள் மரபை சார்ந்தவர்கள், சமணர்கள் இல்லை. இவர்கள் அமணர்கள், ஊருக்கு ஒதுக்குபுறங்களில் வாழ்ந்தவர்கள். அனால் மகாவீரரை பின்பற்றிய சமணர்கள் அரசர்களோடு நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள். சமணர்களுக்கும் சைவமதத்தை சேர்ந்த திருஞானசம்பந்தருக்கும் , வரகுணபாண்டிய மன்னனின் வெப்புநோய் (உடல் முழவதும் கொப்புளங்கள் தோன்றுவது) குணபடுத்துகிற நிகழ்வில் தோற்றுபோன சமணர்கள் 8000 பேரை மதுரையில் கழுவேற்றபட்டதாக (கழுமரம்- _ பென்சில் போன்ற கூர்மையான மரத்தில் ஆசணவாயில் அமரவைக்கபட்டு உடல் கனம்காரணமாக உடல் இருகூறுகளாக பிளந்து பலியாவது) வரலாறுகள் உண்டு. மதுரைக்கு அருகில் இன்றும் இருக்கிற சாமநத்தம் என்ற ஊரின் பெயர் சமணர் ரத்தம் என்பதிலிருந்த மறுவிய பெயராகும். இவர்களின் காலம் கி.பி.7ம் நூற்றாண்டு. பஞ்சபாண்டவர்கள் மலையில் வாழ்ந்த சித்தர்களின் காலம் கி.மு. 2ம் நூற்றாண்டு என்பது சில வரலாற்று அறிஞர்களின் கருத்து. பஞ்சபாண்டவர்மலை என்ற பெயரே வைதிக மதம் பிற்காலத்தில் சூட்டிய பெயராகும்.

தமிழகம் முழுவதும் இது போன்ற வரலாறு சொல்கின்ற மலைகள் உள்ளன. இவை தமிழரின் கலாச்சாரம், பண்பாடு, மொழிகளின் வரலாற்றை தனக்குள் கொண்டிருக்கின்றன.சில நூறு ஆண்டுகள் பழமையானதையே பொக்கிஷமாக பாதுகாக்கும் வெளிநாட்டினருடன் ஒப்பிடும்போது தமிழர்கள் 2000 ஆண்டுக்கும் மேல் பழமைவாய்ந்த தனது வரலாற்றை பாதுகாப்பதில் அக்கறை குறைவாகவே உள்ளது. கடந்தகால வரலாறுகள் தான் ஒருசமுகத்தை உருக்குலையாமல் பாதுகாக்கும். எனவே தனது பழமையை பாதுகாப்பது ஒவ்வொரு தமிழனின் முக்கிய கடமையாகும். அப்போது தான் தமிழ்மொழியையும்,தமிழ்சமுகத்தையும் பாதுகாப்பது சாத்தியமாகும்.

படவிளக்கம்

படம் 1. பஞ்சபாண்டவர்மலை

படம் 2. கற்படுக்கைகள்

படம் 3. தமிழி எழுத்துக்கள்

படம் 4. முத்துக்கிருஷணன்

படம் 5. மகாவீரரின் புடைப்பு சிற்பம்.

0 Responses to "மலைகள் சொல்லும் வரலாறுகள்"

Post a Comment