
ஒவ்வொரு முறையும்
உன்னைப் பார்த்து விட்டு
திரும்பும் போது
உயிரற்ற உடலாய்
பயணப்படுகிறேன்……….
பேருந்துப் பயணங்களில்
பின்னோக்கி விரையும்
மரங்களைப் போல
உன்னை நோக்கித் தாவுது
என் மனக்குரங்கு …..
நிலவினைக் காட்டி
சோறூட்டும் அன்னை
விரலினை பிடித்துக் கொண்டு
அடங்கள் செய்யும்
சிறு குழந்தை போல
உன்
நினைவுகளில் தவழ்கிறது
என் மனக்குழந்தை …….
எனக்கு
உயிர் கொடுத்தாள் தாய்
என்
பேனாவிற்கு “உயிர்மை”
கொடுத்தவள் நீ…
கல்லூரிக் காலங்களில்
கன்னியரை மயக்க
கவிதைகள் புனைந்தேன் பல…
“கண்டதும் காதல்”-
காமக் கிளர்ச்சிகளை காதல் என
தப்பாக கற்பிதங்கள்
செய்து கொள்ளும்
வயது அது …
இது
உன்னை பற்றிய கவிதை
மட்டும் அல்ல
உண்மையை பற்றியதும் கூட…
ஒவ்வொரு பயணத்தின் போதும்
எனை மறக்காமால்
எடுத்து வரச் சொல்லி
நீ
எழுதிக் கொடுக்கும்
பொருட்கள் பல..
ஆனால்
நான் எதை மறந்தாலும்
மறவாமல் சுமந்து வருவது
உன் நினைவுகள் …..
பிரசவம்
பெண்களுக்கு மறு ஜென்மம்
என்பார்கள்
எனக்கும் கூடத்தான்
உன்னை பிரிந்திருப்பதால் …
உன்னைக் காணும்
அந்த
ஒரு நாளிற்காக
ஒவ்வொரு நாட்களையும்
பிரயத்தனப்பட்டு
கடத்திக் கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு……
0 Responses to "உன் நினைவுகளோடு"
Post a Comment